search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எண்ணும் எழுத்தும் திட்டம்"

    • அரும்பு, மொட்டு மற்றும் மலர் என 3 வகைகளில் பிரித்து மாணவர்களுக்கு செயல்வழிக்கற்றல் பயிற்சி அளிக்கப்பட்டது.
    • மாநில அளவிலான பயிற்சி வருகிற 18-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை மதுரையில் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    எண்ணும் எழுத்தும் திட்டம் வரும் கல்வி ஆண்டில் 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுவதை ஒட்டி வரும் 18-ந் தேதி மதுரையில் மாநில அளவிலான பயிற்சி தொடங்கப்பட உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தொடக்கக் கல்வியில் ஏற்பட்ட தேக்கத்தை சரிசெய்ய மாநில அரசு எண்ணும் எழுத்தும் திட்டத்தை கொண்டுவந்தது. அதாவது கொரோனா தொற்றால் 2 ஆண்டுகள் பள்ளிகள் நேரடியாக செயல்படாத நிலையில் கற்றலில் மாணவர்களிடம் ஏற்பட்ட இடைவெளியை படிப்படியாக குறைக்க இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

    குறிப்பாக தொடக்கப்பள்ளி மாணவர்கள் 1, 2 மற்றும் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் மூலம் அரும்பு, மொட்டு மற்றும் மலர் என 3 வகைகளில் பிரித்து மாணவர்களுக்கு செயல்வழிக்கற்றல் பயிற்சி அளிக்கப்பட்டது. எண்ணறிவையும், எழுத்தறிவையும் பெறாமல் விடுபட்டவர்களுக்காக இந்த திட்டம் மிகவும் பயன் அளித்தது.

    கொரோனா காலகட்டத்தில் மாணவர்கள் பல்வேறு மனச்சிதறல்களுக்கு ஆளான நிலையில் அவர்களின் கவனத்தை மீட்டெடுக்கும் வகையில் அரும்பு, மொட்டு மற்றும் மலருக்கான செயல்வழிகற்றல் பாடங்கள் உருவாக்கப்பட்டன. அதன்படி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. தற்போது தொடர்ந்து 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

    இது தொடர்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 மற்றும் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான முதல் பருவத்துக்கான பாடப்பொருள் உருவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளன. இதையடுத்து 4 மற்றும் 5-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான பயிற்சி வருகிற 18-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை 3 நாட்கள் மதுரையில் நடைபெறுகிறது.

    இதில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 18 ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். இதையடுத்து மாவட்ட அளவிலான பயிற்சி வரும் 25-ந் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒன்றிய அளவிலான பயிற்சி ஜூன் 1-ம் தேதி தொடங்கி வரும் 3-ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது" என்றனர்.

    எண்ணும் எழுத்தும் திட்டத்தை கொண்டு 2025-ம் ஆண்டுக்குள் கொரோனா காலகட்டத்தில் பள்ளி செல்ல முடியாத அனைத்து குழந்தைகளும், அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதன் அடுத்தகட்டமாக தற்போது இத்திட்டம் வரும் கல்வி ஆண்டிலேயே விரிவாக்கம் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் பொருள் புரிந்து படிக்கும் திறனையும், அடிப்படை கணிதச்செயல்பாடுகளைச் செய்யும் திறன்களையும் பெற வேண்டும் என்பதன் முக்கிய நோக்கத்தையே இத்திட்டத்தின் விரிவாக்கம் காட்டுவதாக சொல்கின்றனர் கல்வியாளர்கள்.

    • செப்டம்பா் மாதத்திலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், தற்போது பணியாற்றியது போல சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
    • மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம் அரசின் நலத் திட்டங்கள் குறித்து தேவையான விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.ந

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தி ல் பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் ஊட்டி அரசு விருந்தினர் மாளிகையில், நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் டி.என்.வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் டி.என்.வெங்கடேஷ் கூறியதாவது:-நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகள் தென்மேற்குப் பருவ மழை காலத்தில் ஆற்றிய பணி சிறப்பானது.

    செப்டம்பா் மாதத்திலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், தற்போது பணியாற்றியது போல சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

    தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை வேகப்படுத்த வேண்டும்.ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.பள்ளிக் கல்வித் துறையின் மூலம் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் போன்ற அரசின் சிறப்பான திட்டங்கள் குறித்தும் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

    மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம் அரசின் நலத் திட்டங்கள் குறித்து தேவையான விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, அவா் ஊட்டி நகராட்சிக்குள்பட்ட காந்தல் பகுதியில், நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அறிவுசாா் மையம் மற்றும் நூலகம் அமைக்கும் பணியியையும், கோடப்பமந்து பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நிலச்சரிவு தடுப்புச் சுவரையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

    இதில், மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே, மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மோகன் நிவாஸ், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மனோகரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் முறையினை மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    • எழுத்தறிவையும் எண்ணறிவையும் பெறுவது உறுதி செய்யப்படுகின்ற வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

    தேனி:

    தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட முத்துதேவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் முறையினை மாவட்ட கலெக்டர் முரளிதரன், பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, தெரிவித்ததாவது,

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான எண்ணும், எழுத்தும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 3-வகுப்பு வரை பயிலும் அனைத்துக் குழந்தைகளும் பிழையின்றிப் படிக்கவும், எழுதவும் அடிப்படைக் கணக்குகளைக் செய்யவுமான எழுத்தறிவையும் எண்ணறிவையும் மேம்படுதுகின்ற வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    குழந்தைகள் கற்றலை பெறுவதற்கு உதவியாக பள்ளிக்கல்வித்துறையின் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டு வரும் எண்ணும் எழுத்தும் திட்டம் கற்றல் நிலைக்கேற்ப கற்ப்பித்தல் என்ற அணுகுமுறையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. பாடவாரியாக உருவாக்கப்பட்டுள்ள ஆசிரியர் கையேடுகளும், பயிற்சி நூல்களும் ஒவ்வொரு குழந்தையும் தனக்கு தெரிந்த கற்றல் நிலையிலிருந்து படிப்படியாக தனது கற்றலை வளர்த்துக் கொண்டு செல்வதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் அனைத்துக் கூறுகளையும் நடைமுறைப்படுத்துவதன் மூலம் 2025-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் பிழையின்றிப் படிக்கவும், எழுதவும் அடிப்படைக் கணக்குகளைக் செய்யவுமான எழுத்தறிவையும் எண்ணறிவையும் பெறுவது உறுதி செய்யப்படுகின்ற வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

    அதனைத்தொடர்ந்து, பள்ளியில் சுகாதாரப்பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும், மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    • 1 முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு திட்டம்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    அரக்கோணம்:

    பாணாவரம் அடுத்த ரங்காபுரம் அரசு ஆரம்பப் பள்ளியில் முதல் அமைச்சரின் எண்ணும் எழுத்தும் திட்ட விளக்க பெற்றோர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி ஜெயம்மாள் விஜயராகவன் தலைமை தாங்கினார். ஊராட்சி துணைத் தலைவர் திருமதி சரண்யா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் திருமதி கற்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக் கூட்டத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு எண்ணும், எழுத்தும் திட்டத்தைப் பற்றி தலைமை ஆசிரியர் பாஸ்கரன் விளக்கி கூறினார். மற்றும் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    முதலமைச்சரின் எண்ணும் எழுத்தும் திட்டத்தை சிறப்பாக செயல்பாடுத்துதல், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை புதிய ஆசிரியரை கொண்டு உடனே நிரப்ப கோருதல், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை சிறப்பாக நடைப்பெற்றதையொட்டி பாராட்டுதல், புதிய ஆசிரியரை நியமிக்கும் வரை புரவல ஆசிரியருக்கு ஊதியம் வழங்க உதவுதல், இல்லம் தேடிக் கல்வி மையத்தை சிறப்பாக நடைப்பெற கண்காணித்து உதவுதல் மற்றும் அதன் செயல்பாடுகளை ஊக்குவித்தல், பல ஆண்டுகளாக பழுதுபார்க்காமல் உள்ள பள்ளி கட்டிடங்களை உடனே பழுபார்க்க அதிகாரிகளை கோருதல், சுகாதார பணியாளர்களை நியமிக்க உதவுதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் பெரும்பான்மையான பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் புரவல ஆசிரியர்கள் திருமதி ரேவதி குணா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவாக புரவல ஆசிரியர் ராதிகா நன்றி கூறினார்.

    • கொரோனாவால் 2 வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டடிருந்தன.
    • ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நடத்தப்பட்டது.

    கலசபாக்கம்:

    கலசப்பாக்கம் பகுதியில் உள்ள விண்ணுவாம்பட்டு அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் மற்றும் என்னும் எழுத்தும் திட்டத்தில் கல்வி கற்பதில் மாணவர்களின் திறன்களை குறித்தும் மற்றும் மதிய உணவு வழங்குதல் ஆகியவை குறித்து கலசப்பாக்கம் தி.சரவணன் எம்.எல்.ஏ. திடீர் என்று சென்று மாணவர்களுடன் தரையில் அமர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறுகையில் எனது தொகுதிக்குட்பட்ட தொடக்கப்பள்ளிகளில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டடிருந்தன இருப்பினும் தற்போது கொரோனா குறைந்து பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 வருடங்களாக மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையில் அவர்களின் கற்றல் திறன் குறைந்திருக்கலாம் என கருதி எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

    இதற்காக 1 முதல் 3 வகுப்பு வரை செல்லும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் நடத்தப்பட்டு இதன் மூலம் 1 வகுப்பு முதல் 3 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் எண்ணும் எழுத்தும் திட்டத்தின்கீழ் அரும்பு மொட்டு மலர் என 3 வகையாக மாணவர்களின் கல்வித்தரத்தை பிரித்து அதற்கேற்றவாறு எண்ணும் எழுத்தும் திட்டத்தில் முழுமை பெற செய்வதே இந்த திட்டமாகும் இந்த திட்டம் ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் எப்படி உள்ளது என்பதற்காகவே நான் நேரில் சென்று ஆய்வு செய்தேன் அப்போது இந்த பள்ளியில் உள்ள ஆசிரியர் முதல் மாணவர்கள் வரை கற்றல் கற்பித்தல் திறனில் நல்ல முறையில் கற்பித்து வருகின்றனர்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் அன்பரசிராஜசேகரன் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சிவக்குமார் தலைமை ஆசிரியர் அன்னபூரணி உதவி ஆசிரியர் சந்தியா ஆகியோர் உடனிருந்தனர்.

    • கொரோனா காலகட்டத்தில் குழந்தைளுக்கு அடிப்படை கல்வியறிவு வழங்க முடியாமல் போய்விட்டது.
    • கடந்தாண்டுகளில் மூன்றாம் வகுப்பு வரை பாடப்புத்தகம் சார்ந்த கற்பித்தல் அமைந்திருந்தது.

    திருப்பூர்:

    கொரோனா சமயத்தில் மாணவர்களுக்கு கற்றலில் ஏற்பட்ட மிகப்பெரிய இடைவெளியை குறைக்கும் விதமாக எண்ணும் எழுத்தும் திட்டம் ஒன்று முதல் 3-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இன்று தொடங்குகிறது.இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், 8வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் முழுமையான எண்ணறிவையும், எழுத்தறிவையும் பெற்றிருக்க வேண்டும் என்பதே. தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு முதல்கட்டமாக கற்றல் உபகரணங்கள் பயன்படுத்தி கற்பிப்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டன.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள1 முதல் 3-ம்வகுப்பு வரை கற்பிக்கும் 1,800 ஆசிரியர்களும் இதன்கீழ் பயனடைந்துள்ளனர்.

    இது குறித்து எண்ணும் எழுத்தும் பயிற்சி பெற்ற 15 வேலம்பாளையம் நடுநிலைபள்ளி இடைநிலை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    கொரோனா காலகட்டத்தில் குழந்தைளுக்கு அடிப்படை கல்வியறிவு வழங்க முடியாமல் போய்விட்டது. எல்.கே.ஜி., யு.கே.ஜி., படிக்காமல்நேரடியாக ஒன்றாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை ஈடுகட்ட சிறப்பு கற்பித்தல் முறையை கல்வித்துறை கொண்டு வந்துள்ளது.தற்போது முதல் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர் 2025ல் 3-ம்வகுப்பு முடிக்கையில், அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவு பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலத்தை பிழையின்றி வாசிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

    கணிதத்தின் அடிப்படை அறிவை பெற்றிருக்க வேண்டும் என்பதே இதன் சாரம்சம்.இதற்காக சிறப்பு ஆசிரியர் கையேடு மாணவர்களுக்கு பாடப்புத்தகத்துடன் பிரத்யேக பயிற்சி புத்தகமும் வழங்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு, அரும்பு நிலை இரண்டாம் வகுப்பு மொட்டு நிலை', மூன்றாம் வகுப்பு, மலர் நிலை என மூன்று நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    கடந்தாண்டுகளில் மூன்றாம் வகுப்பு வரை பாடப்புத்தகம் சார்ந்த கற்பித்தல் அமைந்திருந்தது. இத்திட்டத்தின்படி கல்வி உபகணரங்கள், விளையாட்டு, பொம்மலாட்டம், குவிஸ், கலைப்பொருட்கள் சார்ந்த செயல்முறைகள், பயிற்சி புத்தகங்களில் கற்பித்தல் இருக்க போகிறது.பாடப்புத்தகம் அவ்வப்போது துணைக்கருவியாக மட்டுமே பயன்படுத்தப்படும். விரைவில் மதிப்பீடு செய்ய செயலி அறிமுகப்படுத்தப்படுகிறது. மாணவர்களுக்கு நிச்சயம் இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமே. இவ்வாறு அவர் கூறினார்.

    ×